Wednesday, 17 December 2014

காவல் துறை உங்கள் (பொது மக்களின்) நண்பணா?

 காவல் துறை உங்கள் நண்பன் என்று சொல்வதில் ஏதேனும் உண்மையுள்ளதா?

உண்மையில், நடைமுறையில் காவல் துறையினர், தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும், தங்களை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்ற தொனியிலும் மற்றும் வெகு ஜன விரோதிகளாக காண்பிக்கும் வகையில் தான் செயல்படுகிறார்கள்.

அதற்கு உதாரணமாக கீழே சில சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன்.
       
சம்பவம் - 1
கடந்த செப்டம்பர் மாதம் விருகம்பாக்கத்தில் ஆஷா என்பவருடைய விடுதியில் குடிபோதையில் நுழைந்த விருகம்பாக்க காவல் நிலைய இரு காவலர்கள், அங்குள்ள இரண்டு பெண்களை மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் - 2
கடந்த ஜூன் மாதம் கரூரில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அதன் தொடர்பாக கொல்லப்பட்ட பெண்ணுடைய தோழிகள் பலரை விசாரணை என்ற பெயரில் தினமும் இரவு 11 மணி வரை போலீசார் தொந்தரவு செய்துள்ளனர். அது தொடர்பாக அந்தப் பெண்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார்கள்.

சம்பவம் - 3
கடந்த மாதம் ஓசூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பிடித்துச் சென்ற காவலர், காவல் கட்டுப்பாட்டு அறையில் வைத்து அந்தப் பெண்களில் ஒருவரிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்பாக அந்தக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை உயரதிகாரிகளுக்கு சொல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளரும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் - 4
கடந்த அக்டோபர் மாதம் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 23 வயது தலித் வாலிபர் இறந்து போனார். அவர் பூச்சி மருந்து குடித்தார் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.


சம்பவம் - 5
கடந்த அக்டோபர் மாதம் இராமநாதபுரம் மாவட்டம், S P பட்டினம்  காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் போலீசாரால் சுட்டு / அடித்துக் கொல்லப்பட்டார்.


சம்பவம் - 6
கடந்த ஜூன் மாதம் நடந்த ஒரு சவ ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அமைந்தகரையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை சேதப்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர், அந்த சம்பவத்தில்  பாதிப்பிற்குள்ளான அந்தக் கிறிஸ்தவ தேவாலய போதகரைத் திட்டி, தாக்கவும் முனைந்துள்ளார்     

சம்பவம் - 7
கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனை, நீலாங்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் தன்னுடைய கைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகாயமுண்டாக்கி, விசாரணையை முடித்து வைத்தார்.

சம்பவம் - 8
கடந்த ஜூன் மாதம் நடந்த ஒரு கொலை தொடர்பாக சம்பந்தமே இல்லாத நாகர்கோயிலைச் சேர்ந்த ஒருவரை சட்ட விரோதமாக கடத்திச் சென்று மூன்று நாட்கள் அடைத்து சித்திரவதை செய்த  போலீசார், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இதைக் கூறியுள்ளனர்.     


சம்பவம் - 9
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தானேவில் பணிபுரிகிற ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் அவதூறு கூறி பரப்பப்பட்ட வாட்ஸ் அப் செய்தியில் சென்னையிலுள்ள மூன்று காவல் ஆய்வாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

சம்பவம் - 10
கடந்த சில வருடங்களுக்கு முன் தன்னுடைய தம்பியை பொய்யாக கைது செய்ததை கேள்வி கேட்ட அண்ணனும் பொய்யாக கைது செய்யப்பாட்டார். தன்னை போலீசார் பொய்யாக கைது செய்ததையும், தன்னை போலீசார் அடித்துத் துன்புறுத்தியதையும் நீதிமன்ற நடுவரிடம் சொன்ன காரணத்திற்காக சிறைக்குக் கொண்டு செல்லும் முன் அவர் மீண்டும் போலீசாரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டார். போலீசாரின் இந்த அதிகார அத்துமீறல்களை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, 8 போலீசாரை குற்றவாளிகளாக்கி கடந்த செப்டம்பர் மாதம் ஆம்பூர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.
சம்பவம் - 11
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு கொலையில், சந்தேகிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு பெண்மணி, காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரால் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். அந்தப் பெண்மணியின்  உறவினர் தொடர்ந்த வழக்கில் இந்த கற்பழிப்பு மற்றும் சித்திரவதைகளை விசாரிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் - 12
கடந்த ஆகஸ்ட் மாதம் காரில் வந்து கொண்டிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு குடும்பம், அங்கு பணியிலிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் கேள்வி கேட்டதால் அந்தப் பட்டுக்கோட்டை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அந்த நபரை காதில் ஓங்கி அடித்ததில், அந்த நபர் காது கேட்கும் திறன் இழந்து போயுள்ளார். அதன் தொடர்பாக அந்தக் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.        

சம்பவம் - 13
கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில், நடக்காத ஒரு விபத்திற்காக பத்து போலீசார் கொண்ட கும்பல் பட்டப் பகலில் நடுச் சாலையில் ஒரு குடும்பத்தை அடித்துத், துவைத்து விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக அந்தக் குடும்பம் கொடுத்த புகாரை வாங்க மதுரைப் போலீசார் மறுத்து விட்டனர். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   


சம்பவம் – 14
இராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவிற்கு, பொய்யான தகவல்கள் கூறிய காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சில சமூக நல ஆர்வலர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.  

இன்னும் இது போல பல சம்பவங்களை நம்மால் உதாரணம் கண்பிக்க முடியும்.

இதோடல்லாமல் புகார் கொடுக்கச் செல்லும் பணமில்லாத மற்றும் பின்புலமில்லாதவர்களின் நிலையை நினைத்தால், அவர்கள் காவல் நிலையங்களில் நடத்தப்படும் விதத்தைக் கண்டால், காவல் துறை எங்கள் நண்பன் என்னும் வாசகத்தைப் பார்க்கவும், அந்த வாசகத்தைக் கேட்கவும் உள்ளம் பதைத்து விடும்.   
        
மேற் சொன்ன சம்பவங்களில், லஞ்சத்திற்காக புகார் மாற்றப்பட்ட விசயங்கள், புகார்தாரர்களையே குற்றவாளிகளாக்கிய விசயங்கள், பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளைத் தப்ப வைக்கின்ற விசயங்கள், காவல் நிலையத்தில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகள் போன்ற எந்த சம்பவத்தையும் நாம் சுட்டிக் காண்பிக்கவில்லை. நாம் அதைச் சொல்ல ஆரம்பித்தால்,  அதெல்லாம் நீண்ட நெடிய தொடராகி விடும்.        

சுருங்கச் சொன்னால் காவல் துறை உங்கள் நண்பன் என்பது “”முடவனை கொம்புத் தேனுக்கு ஆசைப் படச்”” சொல்லும் ஒரு செயலே என்பது காவல் துறையினரின்  
நடவடிக்கைகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.   

- M.R.

Tuesday, 26 February 2013

குழந்தைகளைப் பாதுகாப்போம்! அடுத்துக் கெடுப்பவர்களிடமிருந்து...




 ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் நாளை குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவதற்கு எதிரான நாளாக அறிவித்துள்ளன உலகநாடுகள். இந்த ஆண்டும் நவம்பர் 19ஆம் நாளை அப்படியே அறிவித்துள்ளன உலக நாடுகள். இப்படி ஆண்டில் ஒரு நாளை அறிவிப்பதால் என்ன பயன்?

இந்தக் கேள்விக்கு இன்றளவும் தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு விதத்தில் இந்த நாள் பயன்படுகின்றது. அது, குழந்தைகளுக்கெதிராக நடக்கும் கொடுமைகளைப் பகிரங்கப்படுத்துகின்றது. இப்படிக் குழந்தைகளுக்கெதிராக நடக்கும் கொடுமைகளைப் பகிரங்கப்படுத்து வதால் மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுகின்றது அவ்வளவு தான்.

ஆனால் 2003 நவம்பர் 19ஆம் நாள் கிடைத்த தகவல்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதாய் அமைந்தன. நமது குழந்தைகள் சிறுவயதிலேயே பாலியல் வன்முறைகளுக்கு ஆட்படுத்தப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் குழந்தை கற்பழிக்கப் படுகின்றது. 

பத்து குழந்தைகளில் ஒன்று பாலியல் வன்முறைக்கு பலியாகின்றது. இத்தனையும் இந்தியாவிலேயே நடைபெறுகின்றது. பாலியல் வன்முறை என்பது குழந்தைகளின் மறைவிடங்களை சில காம வெறியர்கள் தங்கள் வெறிக்குப் பயன்படுத்துவது. இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுள் பாதிபேர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். 
 

உலகிலுள்ள இதர நாடுகளைவிட இந்தியா இந்த விஷயத்தில் முன்னே நிற்கின்றது. இந்த தகவலை லூயிஸ்து இன்கல்பிரித் என்பவர் தருகின்றார். இவர் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான குழந்தைகளின் சிகிச்சை மையம்என்பதை நிறுவியவர். (Centre for the Prevention and Treatment of Child Sexual Abuse - CSA).


நாம் மேலே சொன்ன புள்ளிவிவரங்கள் அல்லது கணக்குகள் மிகவும் குறைவானவைதான். உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகம். காரணம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் தங்களுக்கேற்பட்ட அவமானத்தை வெளியே சொல்வதில்லை. அப்படியே குழந்தைகள் சொன்னாலும் பெற்றோர்கள் குடும்பத்தின் தன்மானங்கருதி அதனை வெளியே சொல்வதில்லை. நிச்சயமாக அவர்கள் அவற்றை வழக்குகளாக மாற்றுவதில்லை. 

குழந்தைகளைக் கெடுப்பவர்கள் யார்?


இந்த பிஞ்சுகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபவர்கள், பல நேரங்களில் அவர்களின் உறவினர்கள். இந்த உறவினர்களோடு குழந்தைகள் விளையாடும்போது அவர்களை யாரும் சந்தேகப்படமாட்டார்கள். அப்படியே



குழந்தைகள் வெளியே சொன்னாலும் பெற்றோர்கள், தெரியாமல் கைபட்டிருக்கும். அதை ஏன் பெரிதுபடுத்துகின்றாய்? என்று உதறித்தள்ளிவிடுவார்கள். அதேபோல் சில நேரங்களில் அண்டை அயலார்கள் - கண்ணியமானவர்கள் என மதிக்கப்படும் ஆசிரியர்கள் ஆகியோர்.

நமது இந்தியாவில் ஒரு நிறுவனம். அதன் பெயர் இந்திய தன்னார்வ ஆரோக்கியக் கழகம் (Voluntary Health Association of India) இந்த நிறுவனம் ஒரு கணக்கை சொல்கிறது. 

அது, குழந்தைகளை வன்முறைக்கு உள்ளாக்குகின்றவர்களில் 85 சதவீதத்தினர் அந்தக் குடும்பத்தோடு நெருங்கி பழகுபவர்களே!



இவர்கள், அதாவது குடும்பத்தோடு நெருங்கி பழகுபவர்கள் இந்தப் பாதகத்தை எப்படிச் செய்கின்றார்கள் என்பதை ஒரு உண்மைச் சம்பவத்தைக் கொண்டு இப்படி விளக்கலாம். 

நமது பக்கத்து மாநிலம் ஆந்திரா. அதில் அழகியதொரு நகரம் விஜயவாடா. இங்கே காந்திநகர் என்றொரு குடியிருப்பு. இங்கே அங்கிள் இரமணன்என்றால் குடியிருப்பில் அனைவருக்கும் தெரியும். வயது 35. இவர் அந்தப் பகுதியிலுள்ள பெயரும் புகழும் பெற்ற ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியர். பள்ளியில் பாடஞ்சொல்லித் தருவதிலும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு உழைப்பதிலும் தன்னிகரற்று விளங்குபவர். அவரது குணத்தை யாரும் குறை சொல்லத் துணியமாட்டார்கள். 

குடியிருப்பில் வாழ்கின்றவர்களுக்கும் உதவி செய்து வாழ்பவர். படிப்பில் பின் தங்கி நிற்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்வார். இலவசமாக டியூசன்பாடம் சொல்லி தருபவர். தன் மனைவிக்கும் நல்ல கணவராக நடந்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். இந்தக் குழந்தைகளுக்கும் சிறந்த அப்பாவாக நடந்துக் கொண்டார். இவரிடம் இலவசப்பாடம் பயின்ற குழந்தைகளில் ஒருத்தி தான் பிரீத்தி’.

பிரீத்தி தன் பெற்றோர்களிடம் அங்கிள் இரமணன் அடிக்கடி படுக்கச் சொல்கின்றார் என்று புகார் கூறியபோது பெற்றோர்கள் உனக்கென்ன பைத்தியமா? உதை வாங்குவாய், இப்படியெல்லாம் பேசினால்என அதட்டி வாயை அடைத்து விட்டார்கள். 

     ஒரு வாரம் கடந்தது... 

பிரீத்தி கட்டுப்படுத்த முடியாத பெண்ணாக அழுதுகொண்டே இருந்தாள். இந்த முறை பெற்றோர்களால் அதட்டி அடக்க முடியவில்லை பிரீத்தியை. அவர்கள் அவளின் குறையை அக்கறையோடு கேட்டார்கள். முன்னர் சொன்ன அதே புகாரைத்தான் அவள் சொன்னாள்.

இன்றும் வரச்சொல்லி இருக்கின்றார் என்றாள். அன்று பெற்றோர்கள் அவளைப் போகச் சொல்லிவிட்டு மறைந்திருந்து பார்த்தார்கள். வல்லவர், நல்லவர், பெயர் பெற்றவர், அன்புள்ளம் கொண்ட ஆசிரியர் இரமணன் சிக்கிக் கொண்டார். 

இப்படி அடுத்துக் கெடுப்பவர்களால் தாம் குழந்தைகள் கெடுக்கப்படுகிறார்கள். இப்படிப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபடுவர்கள் பெண் குழந்தைகள் மட்டும் தான் என்றில்லை. ஆண் குழந்தைகளும் இதுபோல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். 

அங்கே பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகின்றவர்கள் ஆசிரியர்கள், அவர்களை கால்பந்து, கிரிக்கெட் (கோச்சுகள்) ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி தருபவர்கள் எனப் பட்டியல் நீளுகின்றது. 

 நம் குழந்தைகளை அடுத்தவர்களிடம் பழக விடக்கூடாது என்ற முடிவுக்கு யாரும் வந்துவிடவேண்டாம். தாராளமாகப் பழகவிடுவோம். அதே நேரத்தில் கவனமாகவும் இருப்போம். குழந்தைகளை அடுத்துவருபவர்கள் கெடுத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகுகின்றார்கள் என்பதை நாமாகவே அறிந்திட வேண்டும். அந்த அநியாயத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நாம் எப்படி கண்டுபிடிப்பது?


இதோ சில சமிக்ஞைகள்:


குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகுகின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?


1. அடிக்கடி படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவார்கள்.

2. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படுவது.

3. படுக்கையிலேயே மலம் கழித்தல்.

4. மனநோயாளி போல் எந்த விஷயத்தை எடுத்தாலும் எரிந்து விழுவது.

5. காரணமில்லாமல் கோபப்படுவது.

6. எடுத்தேன், கவிழ்த்தேன் என ஒரு ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் நடந்துக் கொள்வது.

7. மறைவான பகுதிகளில் வீக்கம்.

8. மலக்குடலிலிருந்து இரத்தம் கசிதல்.

9. மறைவான இடங்களிலிருந்து இரத்தம் வெளிப்படுதல்.

10. பள்ளியில் நன்றாகப் படித்துக்கொண்டிருந்த குழந்தைகளிடம் திடீரென ஆர்வக்குறைவு ஏற்படல்.

11. விரக்தி வயப்படல்.

12. குழந்தை தன்னுடைய மறைவிடங்களின் மேல் அதிகமாகக் கவனம் செலுத்துவது.

13. வாலிப பருவமுடையவர்களைக் கண்டால் ஒதுங்கி ஓடுவது.

14. அடிக்கடி அச்சப்படுவது, ஒரு வித நடுக்கம் ஏற்படுவது.

15. தற்கொலை முயற்சிகளை செய்வது. 

ஒருமுறை ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாகிவிட்டால் அந்த பாதிப்பு அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அதன் நெஞ்சை விட்டு அகலாது. அடிக்கடி நடுக்கம் போன்ற உடல் பாதிப்புக்களுக்கு ஆளாகும்.

இத்தனைக்கும் அந்தக் குழந்தை எந்தத் தவறும் செய்ததில்லை. சமுதாயம் அழுகிப்போனதற்கு அந்தக் குழந்தை தண்டனையை அனுபவிக்கின்றது!


தீர்வும், தண்டனையும்


குழந்தைகளைப் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குகின்றவர்களை தண்டிப்பதற்கு சட்டத்தில் எதுவுமில்லை. உண்மையைச் சொன்னால் அதற்கான சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை. 



இந்தக் குழந்தைகளைக் கற்பழிப்பு குற்றங்களாக மட்டுமே பதிவு செய்து விசாரிக்கின்றார்கள். சாதாரணமாகக் கற்பழிப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகள் விசாரிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவர்களை மூன்று விதமாக சித்திரவதைகளுக்கு ஆளாக்குகின்றார்கள்.

1. அவர்கள் பலர் முன் தாங்கள் எப்படியெல்லாம் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதை விளக்கிச் சொல்லிட வேண்டும்.

2. பின்னர் கடுமையான மருத்துவ பரிசோதனைகளுக்குத் தங்களை ஆளாக்கிக் கொள்ள வேண்டும்.

3. நீதிமன்றத்தில் பல நெருடலான, மானத்தை வாங்கும் கேள்விகளுக்கு ஆளாகிவிடவேண்டும்.


இஸ்லாம் காட்டும் பாதை


இப்படிக் குழந்தைகள் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகிவிடும்போது ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அது.

இதற்கு அந்தக் குழந்தைகள் செய்த தவறு எதுவுமில்லை. இந்தப் பிஞ்சு வயதிலேயே அவர்கள் தாங்கள் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க வேண்டுமா?

இதனால் வருமுன் காப்பதே நலம்!
 
குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகளை சற்று முன்னெச்சரிக்கையுடனேயே வளர்க்க வேண்டும். குழந்தைகளை இந்த விஷயங்களில் எந்த அளவுக்கு கவனமாக வளர்க்க வேண்டும் என்பதை இஸ்லாம் இப்படி வலியுறுத்துகின்றது:

குழந்தை ஒன்பது வயதானவுடன் அவள் அன்னிய ஆடவர்களைப் பார்ப்பதும், பழகுவதும் கூடாது. அன்னிய ஆடவர்கள் என்பதில் அவளது தந்தை சகோதரர்கள் நீங்கலாக அனைவரும் அடங்குவார்கள்.

அவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம் அல்லது அது போன்ற மற்றவர்களாகவும் இருக்கலாம். பத்து வயது நிரம்பிவிட்டால் சகோதரர்களையும் சகோதரிகளையும் கூட ஒன்றாய் தூங்க (ஒரே அறையில்) அனுமதிக்கக் கூடாது என்கின்றது இஸ்லாம்.

இங்கே ஒரு பெண் தனியாகச் சென்று ஒரு ஆண் ஆசிரியரிடம் பாடம் பயிலுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு குழந்தை விபரமறிந்த குழந்தையாக மாறிடும்போது அது சாதாரணமாக மறைக்கும் பகுதிகளைப் பார்க்க அனுமதிக்கக்கூடாது. அது குழந்தையின் அம்மா, அக்கா போன்ற நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே.

குழந்தைகள் எதிர் பாலரை அடிக்கடி சந்திக்க அனுமதிக்க வேண்டாம். அவர்கள் ஒரே கல்விக்கூடத்தில் படிப்பவர்களாக இருந்தாலும் சரியே. ஒன்பது வயதை அடைந்ததும் அவள் பெண்மை குறித்து அறிந்திட வேண்டியவற்றை கற்றுக் கொடுத்து விடுங்கள். 

இறைவனைப் பற்றிய அச்சத்தை முன்நிறுத்தி, இஸ்லாம் கற்றுத்தரும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதுதான், நாகரீகம் என்ற பெயரில் காட்டுமிராண்டிகளாக மாறிவிட்ட சமுதாயத்திடமிருந்தும் பாலியல் வன்முறைகளிலிருந்தும் விடுபட இருக்கும் ஒரே வழி.

இவர்களைத் தண்டிக்க சட்டங்கள் இல்லை எனும்போது இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களே ஒரே வழி.



குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லை. 50 சதவிகித குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள் என்கிறபோது, இங்கே பெண்கள் பர்தா போடக்கூடாது என கூப்பாடு போடுகிறவர்களைக் கண்டால் நம்மால் சிரிக்காமல் இருக்க முடிவதில்லை.


Source


(1)  Indian Express, November 9, 2003.

(2)  தப்ரானி நபிமொழித் தொகுப்பு

(3)  Bringing-Up of Children in Islam
- By MGM.

Sunday, 17 February 2013

'இஸ்லாமியர்களும் ஊடகச் சித்தரிப்புகளும்' கருத்தரங்கம்!

   சென்னையில்  பிப்ரவரி 8 ம் தேதி, மாலை 7.00 மணியளவில் நடைபெற்றது.  இதில் மு.குலாம் முஹம்மது, கவிக்கோ அப்துல் ரஹ்மான், தொல்.திருமாவளவன், அ.குமரேசன், எழுத்தாளர் பாமரன், கவின்மலர், ஆளுர் ஷாநவாஸ்,கௌதம் சன்னா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் நடத்தியது. இதில் வைகறை வெளிச்சம் ஆசிரியர், மு.குலாம் முஹம்மது அவர்களது உரை வீடியோ காட்சி..



 


 
 

தொடர்புடைய மற்ற ஆக்கங்கள்:

விஸ்வரூபங்களுக்கு முன்....