Wednesday 17 December 2014

காவல் துறை உங்கள் (பொது மக்களின்) நண்பணா?

 காவல் துறை உங்கள் நண்பன் என்று சொல்வதில் ஏதேனும் உண்மையுள்ளதா?

உண்மையில், நடைமுறையில் காவல் துறையினர், தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும், தங்களை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்ற தொனியிலும் மற்றும் வெகு ஜன விரோதிகளாக காண்பிக்கும் வகையில் தான் செயல்படுகிறார்கள்.

அதற்கு உதாரணமாக கீழே சில சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன்.
       
சம்பவம் - 1
கடந்த செப்டம்பர் மாதம் விருகம்பாக்கத்தில் ஆஷா என்பவருடைய விடுதியில் குடிபோதையில் நுழைந்த விருகம்பாக்க காவல் நிலைய இரு காவலர்கள், அங்குள்ள இரண்டு பெண்களை மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் - 2
கடந்த ஜூன் மாதம் கரூரில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அதன் தொடர்பாக கொல்லப்பட்ட பெண்ணுடைய தோழிகள் பலரை விசாரணை என்ற பெயரில் தினமும் இரவு 11 மணி வரை போலீசார் தொந்தரவு செய்துள்ளனர். அது தொடர்பாக அந்தப் பெண்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார்கள்.

சம்பவம் - 3
கடந்த மாதம் ஓசூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பிடித்துச் சென்ற காவலர், காவல் கட்டுப்பாட்டு அறையில் வைத்து அந்தப் பெண்களில் ஒருவரிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்பாக அந்தக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை உயரதிகாரிகளுக்கு சொல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளரும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் - 4
கடந்த அக்டோபர் மாதம் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 23 வயது தலித் வாலிபர் இறந்து போனார். அவர் பூச்சி மருந்து குடித்தார் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.


சம்பவம் - 5
கடந்த அக்டோபர் மாதம் இராமநாதபுரம் மாவட்டம், S P பட்டினம்  காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் போலீசாரால் சுட்டு / அடித்துக் கொல்லப்பட்டார்.


சம்பவம் - 6
கடந்த ஜூன் மாதம் நடந்த ஒரு சவ ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அமைந்தகரையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை சேதப்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர், அந்த சம்பவத்தில்  பாதிப்பிற்குள்ளான அந்தக் கிறிஸ்தவ தேவாலய போதகரைத் திட்டி, தாக்கவும் முனைந்துள்ளார்     

சம்பவம் - 7
கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனை, நீலாங்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் தன்னுடைய கைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகாயமுண்டாக்கி, விசாரணையை முடித்து வைத்தார்.

சம்பவம் - 8
கடந்த ஜூன் மாதம் நடந்த ஒரு கொலை தொடர்பாக சம்பந்தமே இல்லாத நாகர்கோயிலைச் சேர்ந்த ஒருவரை சட்ட விரோதமாக கடத்திச் சென்று மூன்று நாட்கள் அடைத்து சித்திரவதை செய்த  போலீசார், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இதைக் கூறியுள்ளனர்.     


சம்பவம் - 9
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தானேவில் பணிபுரிகிற ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் அவதூறு கூறி பரப்பப்பட்ட வாட்ஸ் அப் செய்தியில் சென்னையிலுள்ள மூன்று காவல் ஆய்வாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

சம்பவம் - 10
கடந்த சில வருடங்களுக்கு முன் தன்னுடைய தம்பியை பொய்யாக கைது செய்ததை கேள்வி கேட்ட அண்ணனும் பொய்யாக கைது செய்யப்பாட்டார். தன்னை போலீசார் பொய்யாக கைது செய்ததையும், தன்னை போலீசார் அடித்துத் துன்புறுத்தியதையும் நீதிமன்ற நடுவரிடம் சொன்ன காரணத்திற்காக சிறைக்குக் கொண்டு செல்லும் முன் அவர் மீண்டும் போலீசாரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டார். போலீசாரின் இந்த அதிகார அத்துமீறல்களை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, 8 போலீசாரை குற்றவாளிகளாக்கி கடந்த செப்டம்பர் மாதம் ஆம்பூர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.
சம்பவம் - 11
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு கொலையில், சந்தேகிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு பெண்மணி, காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரால் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். அந்தப் பெண்மணியின்  உறவினர் தொடர்ந்த வழக்கில் இந்த கற்பழிப்பு மற்றும் சித்திரவதைகளை விசாரிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் - 12
கடந்த ஆகஸ்ட் மாதம் காரில் வந்து கொண்டிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு குடும்பம், அங்கு பணியிலிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் கேள்வி கேட்டதால் அந்தப் பட்டுக்கோட்டை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அந்த நபரை காதில் ஓங்கி அடித்ததில், அந்த நபர் காது கேட்கும் திறன் இழந்து போயுள்ளார். அதன் தொடர்பாக அந்தக் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.        

சம்பவம் - 13
கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில், நடக்காத ஒரு விபத்திற்காக பத்து போலீசார் கொண்ட கும்பல் பட்டப் பகலில் நடுச் சாலையில் ஒரு குடும்பத்தை அடித்துத், துவைத்து விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக அந்தக் குடும்பம் கொடுத்த புகாரை வாங்க மதுரைப் போலீசார் மறுத்து விட்டனர். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   


சம்பவம் – 14
இராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவிற்கு, பொய்யான தகவல்கள் கூறிய காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சில சமூக நல ஆர்வலர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.  

இன்னும் இது போல பல சம்பவங்களை நம்மால் உதாரணம் கண்பிக்க முடியும்.

இதோடல்லாமல் புகார் கொடுக்கச் செல்லும் பணமில்லாத மற்றும் பின்புலமில்லாதவர்களின் நிலையை நினைத்தால், அவர்கள் காவல் நிலையங்களில் நடத்தப்படும் விதத்தைக் கண்டால், காவல் துறை எங்கள் நண்பன் என்னும் வாசகத்தைப் பார்க்கவும், அந்த வாசகத்தைக் கேட்கவும் உள்ளம் பதைத்து விடும்.   
        
மேற் சொன்ன சம்பவங்களில், லஞ்சத்திற்காக புகார் மாற்றப்பட்ட விசயங்கள், புகார்தாரர்களையே குற்றவாளிகளாக்கிய விசயங்கள், பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளைத் தப்ப வைக்கின்ற விசயங்கள், காவல் நிலையத்தில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகள் போன்ற எந்த சம்பவத்தையும் நாம் சுட்டிக் காண்பிக்கவில்லை. நாம் அதைச் சொல்ல ஆரம்பித்தால்,  அதெல்லாம் நீண்ட நெடிய தொடராகி விடும்.        

சுருங்கச் சொன்னால் காவல் துறை உங்கள் நண்பன் என்பது “”முடவனை கொம்புத் தேனுக்கு ஆசைப் படச்”” சொல்லும் ஒரு செயலே என்பது காவல் துறையினரின்  
நடவடிக்கைகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.   

- M.R.

No comments:

Post a Comment