Tuesday 20 January 2015

மீத்தேன் திட்டம் ஒரு பார்வை

கோ.வரதராஜன்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு.

வையாக தொழில்களிலேயே வயற்றுக்கு சோறு போடும் தொழில் தான் வணங்கத்தக்கது என்பது நம் முன்னோர் மொழி. அத்தொழிலுக்கு அடிப்படையான விவசாயம் என்பது காவிரி படுகையில் ஒரு கலாச்சாரமாகவே இங்கு இருந்து வருகிறது. அதுவும் இங்கு நடந்த விவசாயம் பற்றி மிக பெரிய இலக்கிய வரலாற்று சான்றுகளும் உண்டு அப்படி வியக்க வைக்கும் விவசாய முறைகள் இரத்த நானங்களை போன்ற ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் விவசாய நிலங்களையே பரிசோதனை கூடங்களாக பயன்படுத்தி புதிய புதிய நெல் ராகங்களை உருவாக்கிய மூத்த விவசாயிகளின் ஆராய்ச்சிகள் இப்படி ஏராளமான பெருமைக்கு உரிய நிலமாக இந்த காவேரி படுகை இருந்து வருகிறது. இங்கு பல்வேறு சமூக பிரிவுகள் இருந்தாலும் எல்லோருக்கும் நிலம் தான் தாயாக இருக்கிறது. இந்த மண் இங்குள்ள ஒவ்வொரு மனிதனின் இரத்தமும் சதையிமாய் இருக்கிறது. இப்படி பல்வேறு பெருமிதங்கள் கொண்ட இம்மண்ணில் காலம் காலமாக விவசாயம் செய்த மனிதர்கள் தற்பொழுது தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலைக்கு அரசு அவர்களை தள்ளி இருக்கிறது. விளை நிலத்தால் வாழ்தவர்கள் விளை நிலத்தால் வீழ்துபோகும் அவலம் மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கை நிலைபாடும் விவசாயிகளின் கண்டுகொள்ளாத போக்கும் தான் காரணம், விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு போராடிய எம் மக்கள் விதை கேட்டு போராடிய எம் மக்கள் உரம் கேட்டு போராடிய எம் மக்கள் தங்கள் நிலத்தை அரசாங்கம் அந்நிய நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்து விட்டது என்கின்ற செய்தியை கேட்டதிலிருந்து ஏழைகள் நிலத்தை எங்களிடமே கொடுத்து விடுங்கள் என்று அரசுக்கெதிராக போராடி வருகின்றார்கள், அந்நிய நிறுவனமான கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கம்பனி லிமிடட் காவிரி படுகை நிலங்களில் உள்ள நிலக்கரி படிமங்களில் இருந்து மீதேன் எடுக்க போகிறது என்கிற செய்தி இங்கு உள்ள ஒவ்வொரு மனிதனின் ஆள் மனதிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாண்டிச்சேரி அருகே உள்ள பாகூர் தொடங்கி ஸ்ரீமுஸ்னம், நெய்வேலி, ஜெயம்கொண்டசோழபுரம் வழியாக மன்னார்குடி வரை காவேரி பதிகையில் நிலக்கரி படிமங்கள் பெரும் அளவில் உள்ளது. இந்த நிலக்கரி இடுக்குகளில் மீத்தேன் என்னும் ஏறிவாயு உள்ளது. நிலக்கரி இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுப்பதற்கு கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்பரேசன் லிமிடெட் (great easter energy co-orperation limited)  நிறுவனத்திற்கு மத்திய அரசு 2010-ல் ஒப்பந்தம் செய்ததுள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசும் 4-1-2011-ல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததுள்ளது. ரூ.3600 கோடி முதலீடு செய்து ரூ.60000 கோடி லாபம் ஈட்டக் கூடிய இந்த ஒப்பந்தம் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் சில கோடிகள் கொடுத்து காவேரி படுகையை பாலைவனம் ஆக்க துடித்து கொண்டிருக்கின்றது.


     மொத்தம் 691சதுர கி.மி பரப்பில் 667 சதுர கி.மி பரப்பில் மீத்தேன் எரிவாயும், 24 சதுர கி.மி பரப்பில் நிலக்கரி எடுக்கவும் இருகின்றார்கள். 2000 இடங்களில் துளையிடப்பட்டு கிணறு அமைக்க உள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் வட்டங்களிலும் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வலங்கைமான் வட்டங்களிலும் கிணறு அமைக்க படும். முதற்கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் 12 கிணறுகளும் திருவாரூர் மாவட்டத்தில் 38 கிணறுகள் அமைக்கபடும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் 500 அடி முதல் 1600 அடி ஆழம் வரை நிலகரி படிமங்கள் உள்ளது. இந்த படிமங்களின் இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க முடியும். அதனால் 1500 அடி வரை உள்ள நீர் முழுமையாக வெளியேற்ற வேண்டும். அப்படி செய்யும் போது மேல் மட்டத்தில் உள்ள நீர் கீழ் நோக்கி இறங்கி விடும். இந்த நீரும் மீத்தேன் எடுக்கும் போது வெளியேற்ற படும். மீத்தேன் எடுப்பதற்காக நிலக்கரி படிமங்களை சுக்குநூராக உடைத்து நொறுக்குவதற்கு பயன்படுத்த படும் தொழில்நுட்பம் மிக ஆபத்தானதாகும். நீரியல் விரிசல்(Hydralic fracturing)எனப்படும் இந்த தொழில்நுட்பத்தை தான் இங்கு பயன்படுத்த உள்ளார்கள். உலக நாடுகள் பலவற்றில் நீரியல் விரிசல்(Hydralic fracturing) தொழில்நுட்பதிற்கு எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து கொண்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.       
    2000 அடி வரை துளையிட்டு குழாய் இறக்கி அங்கிருந்து பூமிக்கடியில் பக்கவாட்டில் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு துளையிடுவார்கள். இப்படி எல்லா திசைகளிலும் பக்கவாட்டில் குழாய்களை செலுத்திவிடுவார்கள் துளையிட்ட பின் 600 வகையான வேதி பொருட்களை மணலுடன் கலந்து அதிக அழுத்தத்துடன் இந்த குழாய்களுக்குள் செலுத்தி நிலக்கரி படிமங்களை சிறு சிறு துகள்களாக சிதர செய்வார்கள். பின்னர் உட்செலுத்திய கலவையோடு மீத்தேனை உரிந்து எடுப்பார்கள். உட்செலுத்தப்படும் 600 வகையான வேதி பொருட்களில்(B tex) எனப்படும் மிகக்கொடிய யுரேனியம், ஈயம், ரேடியம், மெத்தனால், ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஃபார்மல்-டி-ஹைட்ரேட் மற்றும் பென்சின் கார்சிநோஜென் கலவைகளும் மற்றும் பெயர் வெளியிடாத பல வேதிப்பொருட்களும் இதில் இருப்பது தான் ஆபத்தானது. இப்படி உட்செலுத்தப்படும் இந்த கலவை முழுமையாக வெளியில் வராமல் மண்ணோடும் நீர் தொகுப்போடும் கலந்து மிகப்பெரிய பாதிப்புகளை அந்த பகுதிகளில் ஏற்படுத்தும்.

மீத்தேன் எரிவாயு எடுக்கபட்டால் நாம் இழக்க வேண்டியவைகள் ஏராளம்:

1. நிலத்தடிநீர் ஒட்டுமொத்தமாக உறிஞ்ச படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் மிச்ச சொச்ச நீரும் பிற்காலத்தில் கிடைக்காமல் வறட்சி ஏற்பட்டு விவசாயம் என்பதே கேள்விக்குறியாய் போகும் அவல நிலைக்கு தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவேரி படுகை தள்ளப்படும்.

2. மீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விட பன்மடங்கு உப்புத் தன்மை கொண்டது. இது வெளியே கொட்டப் படும்போது ஆறுகளிலும் குளங்களிலும் கலந்து விவசாய நிலங்கள் உப்பலங்களாக மாற்றிவிடும்.

3. மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில் இருக்கும் குடிநீரோடு கலந்து மீத்தேன் வாயு வரும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் தீ பற்றி எரிந்ததை நாம் அறிவோம். அது போல் மீத்தேன் எடுக்கப்படும் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் அந்த நீரானது நம் சுற்றுபுரத்தோடு கலந்து சுகாரத்தை கேள்விகுறியாக்கும்?

4. நிலத்தின் அடியில் நெருக்கமாக தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பூகம்பம் ஏற்படக்கூடிய ஆபத்துகளை இந்த வெடிவைப்பு உருவாக்கும்.

5. மீத்தேன் எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் பதிப்பது, சாலை அமைப்பது போன்ற பணிகளை செய்யும் போது நமது விவசாய நிலங்கள் இன்னும் பாதிப்படையும். இந்த குழாய்களில் கசிவு ஏற்பட்டாலோ அல்லது உடைந்துபோனாலோ ஒருபுறம் நமது சுற்றுசூழல் மாசுபடும் மறுபுறம் தனது தொழில்நுட்ப கோளாறுகளை மறைக்க குழாய்களில் ஏற்பட்ட சேதத்திர்காக தனது வாழ்வாதாரத்தை காப்பதற்காக போராடும் மக்களின் மீதே தீவிரவாத வழக்கு போடவும், தேச விரோத செயல் என அப்பாவிகள் மீது குற்றம் சுமத்தவும் வாய்ப்புள்ளது. இத்தகைய கொடூரமான மக்கள் விரோத செயலை தான் நாடுமுழுவதும் வாழ்வாதாரத்தை காப்பதற்காக போராடும் அப்பாவி மக்களுக்கு எதிராக ஆளும் அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றது.

6. போராட்டங்களை நசுக்க செய்யும் பசப்பு வார்த்தையான வேலைவாய்ப்பும் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கிடைக்க அறவே வாய்ப்பில்லை. தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களால் மட்டுமே இந்த பணியை செய்ய முடியும் எனக்கூறி நம்மவர்களை அந்த நிறுவனங்கள் புறக்கணித்துவிடும்.
7. புற்றுநோய், தோல் நோய், சுவாச கோளாறு, மரபணு மாற்று கோளாறுகள், மூலை நரம்பு கோளாறுகள் என பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

8. மீத்தேன் வாயுவையும், நீரையும் நிலத்தில் இருந்து வெளியேற்றிவிட்டால் கிழே ஏற்படும் வெற்றிடத்தில் கடல் நீர் உட்புகுந்து குடிநீர் உப்பு நீராக மாறி குடிநீர் இல்லாத நிலையை ஏற்படுத்தும்.
9. தஞ்சை மாவட்டத்தில் 8வட்டங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 7வட்டங்கள், மற்றும் நாகை மாவட்டத்தில் 8வட்டங்களில் வாழும் 53இலட்சம் மக்களும் காவேரி படுகையில் உள்ள கிட்ட தட்ட இரண்டு கோடி மக்களும் வாழ இடமில்லாமல் வேறு வாழ்விடம் தேடி அகதிகளாக மாறும் அபாய நிலை ஏற்படும்.

இப்படியாக இன்னும் ஏராளமாகவும் தாரளமாகவும் பட்டியலிடலாம். அரசால் தீட்டபடுகின்ற திட்டங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் அல்லது மக்களின் வாழ்வியலை சிதைக்காமல் இருக்க வேண்டும்.
மக்களுக்கான அரசு என்றால் அது தான் வகுக்கும் திட்டங்களை மக்களின் வாழ்வாதாரங்களை கவனத்தில் கொண்டு தீட்ட வேண்டும் அப்படி இல்லாமல் மக்களை காவு கொடுத்து பன்னாட்டு நிறுவனங்களை வளர்க்க நினைக்கும் ஒரு முதலாளித்துவ அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்.

ஆரோக்கியமான மண் என்பது உயிருள்ள ஒரு அமைப்பு அதை சிதைத்துவிட்டு இயற்கையை எப்படி பாதுகாக்க முடியும். எதிர்கால இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப இங்கு உணவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் அதற்கு தரிசு நிலங்களை கூட விளைநிலங்களாக மாற்றி விவசாயம் செய்யபட வேண்டும், இப்படியாக உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உணவு உற்பத்தி மண்டலமாகவும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கின்ற காவேரி படுகையை சிரழித்து எண்ணெய் உற்பத்தியும், மீத்தேன் வாயுவும், நிலகரியும் எடுபதற்கு விளைநிலங்களை கொடுப்பது மக்களுக்கு அரசு செய்யும் துரோகமாகும் எனவே உடனடியாக அரசு இந்த மாபாதக திட்டத்தை கைவிடவேண்டும். 

வனவிலங்குகளுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதி இருப்பதுபோல், பறவைகளுக்கு சரணாலயங்கள் இருப்பதுபோல், தொழில் நிறுவனங்களுக்கு தனியாக தொழிற்பேட்டைகள் இருப்பதுபோல் தமிழகத்தின் நெற்களஞ்சியமான இந்த காவேரி படுகையை பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதியாக அரசு அறிவித்து இந்த தாய் மண்ணை காக்க வேண்டும்! மக்கள் நலம் பாதுகாக்கப்பட வேண்டும்!!

வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...........................

No comments:

Post a Comment