Sunday, 10 February 2013

நாடாளுமன்றத் தாக்குதல்: அருந்ததிராய் எழுப்பும் 13 கேள்விகள்1) நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காவல்துறையும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஃபாசிச அரசாங்கமும் ஓர் அறிவிப்பை செய்து கொண்டே இருந்தன. அது, நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்பதே, 2001ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் (Informal Meeting) நிச்சயமாக நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேய் திட்டவட்டமாக ஓர் எச்சரிக்கையை விடுத்தார்.

டிசம்பர் 13ம் நாள் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க பாதுகாப்புபடையினருக்குக் கடுமையான பயிற்சிகள் அளிக்கபட்டன. நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் சிறப்புக் காவல்கள் போடப்பட்டன. இந்நிலையில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது?

2)  நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் டெல்லியில் இயங்கும் சிறப்புக் காவல் படைப் பிரிவு இந்த நாடாளுமன்றத் தாக்குதல் லஷ்கர்--தொய்பா, ஜெய்ஷ்--முஹம்மத் போன்ற அமைப்புகளின் திட்டமிட்ட செயல் என்று அறிவித்தது. அத்தோடு இந்தத் தாக்குதல் முஹம்மது என்பவரல் தலைமையேற்று நடத்தப்பட்ட தாக்குதல் என்றது. இந்த முஹம்மது என்பவர்தான் 1998ல் இந்திய விமானம் ஐ..814ஐ கடத்தியவர் என்றும் அறிவித்தது. வழக்கு முடிந்த போது இவை எதுவுமே எந்த நீதிமன்றத்திலும் நிருபிக்கப்படவில்லை. இதுதான் உண்மைநிலை என்றால் இவர்களால் எப்படி நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் இது போன்ற அறிவிப்புகளை செய்ய முடிந்த்து? அப்படி அறிவிக்க இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது?


3)  நாடளுமன்றத் தாக்குதல் நடைபெற்றபோது அதனை முழுமையாக நாடளுமன்ற வளாகத்திலுள்ள கேமராக்களாலும் நாடளுமன்ற அரங்கிற்குள் இருந்த (Close Circuit TV- CCTV) க்ளோஸ் சர்க்யூட் டிவி என்ற சி.சி.டி.விகளாலும் பதியப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர் கபில்சிபால் இந்தத் தொலைக்காட்சிப் பதிவை நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என அன்று நாடளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அவரை அப்போதைய மேல்சபையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் நாடளுமன்றத் தாக்குதல் குறித்த விளக்கங்களில் பல குழப்பங்கள் இருக்கின்றன என்றும் கூறினார். காங்கிரஸ் தலைமை கொறடாவான பிரியரஞ்சன்தாஸ் முன்ஷிஅவர்கள், “நாடளுமன்றத்தைத் தாக்க வந்த காரிலிருந்து 6 பேர் இறங்கிப் போவதை நான் பார்த்தேன், ஆனால் 5 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். நாடளுமன்ற வளாகத்தின் தொலைக்காட்சிப் பதிவுகள் (CCTV) தெளிவாக 6 பேரைக் காட்டியது.” என்று கூறினார். பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி சொல்வது சரியானதுதான் என்றால் காவல்துறையினர் ஏன் ஐந்து பேர்கள்தான் காரில் வந்தனர் என சாதிக்கின்றனர்? அந்த ஆறாவது நபர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கின்றார்? அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை? அதை ஏன் பொதுமக்களுக்கு காட்டவில்லை?

4)  இது போன்ற கேள்விகளை அப்போது நாடாளுமன்றத்தில் எல்லோரும் எழுப்பினார்கள். ஆனால் உடனேயே நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திப்போடப்பட்டது. அது ஏன்?

5)  நாடளுமன்றம் தாக்கப்பட்ட உடன் அப்போதைய அரசு நாடளுமன்றத் தாக்குதலில் பாகிஸ்தானின் கை இருக்கின்றது என்பதற்கு மறுக்கவியலாத சாட்சியங்கள் இருப்பதாக அறிவித்தது. அத்தோடு 50 லட்சம் படைவீரர்களை இந்தியா-பாகிஸ்தான் எல்லையை நோக்கிக் கொண்டு சென்றது. இந்தியத் திருநாடு ஓர் அணுஆயுதப் போரை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அஃப்சல் என்பவரை சித்தரவதை செய்து வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைத் தவிர இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது? இந்த ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இவர்கள் தங்களிடம் இருப்பதாகச் சொன்ன அந்த மறுக்க முடியாத அத்தாட்சி என்ன?

6)  டிசம்பர் 13 அன்று நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே பாகிஸ்தான் எல்லையை நோக்கி படைகளை நகர்த்தியதாக பல செய்திகள் கூறுகின்றன. இது உண்மையா? பொய்யா?

7)  நமது படைகளை போர் பீதியுடன் ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைத்திருந்தோம். இதற்கு நாம் செய்த வீண் செலவு எவ்வளவு? இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள்? கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர்? நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர்? கழனிகளில் கன்னி வெடிகளைப் புதைத்ததால் உயிரிழந்த நமது விவசாயிகள் எத்தனை பேர்?

8)  கிரிமினல் வழக்கு ஒன்றில் புலன் விசாரணை மேற்கொள்ளும்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கின்ற தகவல்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது எப்படி என்பதை நிருபிக்க வேண்டியது காவல்துறையின் கடமை, அவ்வாறு இருக்க காவல்துறையினர் முஹம்மது அஃப்சல் அவர்களைக் குற்றவாளி என எப்படிக் கண்டுபிடித்தனர்? காவல்துறையின் சிறப்புப்பிரிவு S.A.R.ஜீலானி என்பவர் மூலமாகத்தான் அஃப்சலைக் கண்டுபிடித்த்தாக கூறுகின்றது. ஆனால் அஃப்சலைக் கைது செய்வதற்கான அவரச செய்திகள் ஜீலானி அவர்களைக் கைது செய்வதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்க எப்படி காவல்துறையினர் அஃப்சலை நாடளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் படுத்துகின்றனர்?

9)  காவல்துறையும், நீதிமன்றங்களும் அஃப்சலை நமது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த ஓர் போராளி என்றும் அவர் ஜம்மு கஷ்மீரின் STF (Special Task Force) சிறப்புக் காவல்படையினர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் ஒத்துக் கொள்கின்றன. அப்படி இருக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஒருவர் எப்படி நாடளுமன்றத்தையே தாக்குகின்ற பெரும் சதியில் ஈடுபட முடியும். இதற்கு சிறப்புக் காவல்படையினர் தரும் விளக்கம் என்ன?

10) லஷ்கர்--தொய்பா, ஜெய்ஷ்--முஹம்மத் போன்ற அமைப்புகள், கஷ்மீரின் சிறப்புக் காவல்படையினர் கீழ் இருந்த ஒருவரை அதிலும் குறிப்பாக சிறப்புக் காவல்படையினரால் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒருவரை நம்பி நாடளுமன்றத் தாக்குதல் போன்ற பெரும் பணிகளில் இறங்குவார்களா?

11) தன்னுடைய வாக்குமூலத்தில் அஃப்சல் என்பவர் தனக்கு முஹம்மது என்பவரை அறிமுகப் படுத்தியவர் தாரீக் தான் என்று கூறியுள்ளார். இந்த தாரீக் என்பவர்தான் முஹம்மது என்பவரை டெல்லிக்கு அழைத்து வரும்படி கூறியதாகவும் கூறுகிறார். தாரீக் என்பவரின் பெயர் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தத் தாரீக் என்பவர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கின்றார்

12) 2001 டிசம்பர் மாதம் 19ம் நாள், அதாவது நாடளுமன்றத்தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மஹாராஷ்டிராவில் உள்ளதானேமாநகரக் காவல்துறை ஆணையர் எஸ்.எம். சங்காரி என்பவர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அந்த அறிவிப்பில், ”நாடாளுமன்றத் தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முஹம்மது யாசீன் ஃபதா முஹம்மத் (என்ற அபூ ஹம்சா) என்பவர் லஷ்கர்--தொய்பாவைச் சார்ந்தவர். அவரை நான் மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்தேன். கைது செய்தவுடன் அவரை ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன்.” என்று கூறினார். தன்னுடைய வாக்குமூலத்தை உறுதிப் படுத்தும் வகையிலான வலுவான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிரா காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் சொல்வது உண்மையானால் ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முஹம்மது யாசீன் எப்படி நாடளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்?

காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் கூறுவது பொய்யாக இருந்தால் முஹம்மது யாசீன் என்பவர் எங்கே இருக்கிறார்?

நாடளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரும் யார் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லையே ஏன்?

13) இந்த வினாக்களை எழுப்பும் அருந்ததிராய், “இவற்றை ஆழமாக ஆராய்கின்றபோது நாடளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் (குறிப்பாக ஜம்மு கஷ்மீரின் சிறப்புக் காவல்படை-யின்) கரங்கள், உதவிகள், ஈடுபாடுகள் ஆகியவை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.” அத்தோடு இந்த செய்திகள் நமக்குள் அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கங்களும், புலனாய்வுத் துறைகளும் இது போன்றே யுக்திகளைக் கையாண்டு தங்களுடைய இலக்குகளை அடைந்து கொள்வது வரலாற்றில் நிரம்பவே நடந்திருக்கின்றது. 1933ல் ஜெர்மனியில் (Reichstag) ரீசஸ்டாக் என்பதை கொளுத்தித்தான் நாஜிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அதேபோல்தான் ஐரோப்பாவின் உளவுத் துறையினர் இத்தாலியில் ரெட் பிரிகேட் என்ற போராளிக் குழுவை மக்கள் மன்றத்தில் தீவிரவாதிகளாகக் காட்டினார்கள். பின்னர் அழித்தார்கள். மேலே உள்ள கேள்விகளை அரசாங்கத்தை நோக்கிவிடுத்துவிட்டு அருந்ததிராய் கூறுகின்றார்:

          ”இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான்

 -M.G.M 

No comments:

Post a Comment